

பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலத்தில் ஆய்வு செய்த சிபிசிஐடி பிரிவு டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான போலீஸார்.
பழநி: பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்ட விரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை அடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த ஜூலை 6-ம் தேதி சட்ட விரோதமாக இரு தனிநபர்களுக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சட்ட விதிகளை மீறி பத்திரப் பதிவு செய்து கொடுத்ததாக பழநி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீதும், நிலத்தை விற்பனை செய்த திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் அண்ட் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையை சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய உடுமலை அடுத்த பாப்பாகுளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை மற்றும் பழநி அடுத்த டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய 4 பேர் மீதும் தேவஸ்தானம் சார்பில் பழநி அடிவாரம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்டப் பதிவாளர் சசிகலா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். முறைகேடாக நடைபெற்ற இந்த பத்திரப் பதிவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வும் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.
இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் நேற்று விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மடத்துக்குச் சொந்தமான நிலத்தின் பத்திரப் பதிவு தொடர்பான முதல் தகவல் அறிக்கை (FIR) உள்ளிட்ட வழக்கு மற்றும் பத்திரப் பதிவு ஆவணங்களை சிபிசிஐடி போலீஸாரிடம் பழநி அடிவாரம் போலீஸார் ஒப்படைத்தனர். சிபிசிஐடி போலீஸார் நேற்று மாலையே விசாரணையைத் தொடங்கினர்.
பழநி பூங்கா சாலையில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பழநி தேவஸ்தான அலுவலகம், பழநி பத்திரப் பதிவு அலுவலகத்திலும் விசாரணை நடத்தினர். இன்னும் 2 நாட்களுக்கு பழநியிலேயே முகாமிட்டு, ஆவணங்கள் அடிப்படையிலும், வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்தும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
பதிவுத் துறை சார்பில் உயர்நிலைக் குழு: நில பத்திரப் பதிவு விவகாரத்தில் முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய, பதிவுத் துறை சார்பில் 3 பேர் கொண்ட உயர்நிலை விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கூடுதல் பதிவுத் துறைத் தலைவர், உதவி பதிவுத் துறைத் தலைவர், மாவட்டப் பதிவாளர் ஒருவர் இடம்பெற்றுள்ளனர். பத்திரப் பதிவு நடந்த நாளில் பணியில் இருந்த சார் பதிவாளர், விடுப்பில் சென்ற சார் பதிவாளர், மாவட்டப் பதிவாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்டோரிடம் இந்த குழுவினர் விரிவான விசாரணை நடத்துவார்கள். பத்திரப் பதிவு நடந்த நாளில் சார் பதிவாளர்அலுவலகத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்ய உள்ளனர். இக்குழுவினர் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பதிவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.