

சென்னை: திமுக தலைவர்களை களங்கப்படுத்தி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவது தொடர்பான புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், போலீஸார் இருவாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக சட்டப்பிரிவு துணைச் செயலாளரான சந்திரபோஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “சமூக வலைத்தளங்களின் வாயிலாக திமுகவையும், திமுக தலைவர்களையும் களங்கப்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் சில தனிப்பட்ட இணைய அமைப்புகளும், தனிநபர்களும் பொது வெளியில் பரப்பி வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வாய்ஸ் ஆஃப் காமன், ரூட் உள்ளிட்ட அமைப்புகளுக்கு எதிராக 19 புகார்கள் அளிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுவே தவெகவைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக கொள்கை ரீதியாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது மட்டும் உடனடியாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் நடவடிக்கையில் இறங்குகின்றனர்.
எனவே இதுதொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நியாயமான, சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதிட்டார்.
இது தொடர்பாக தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் இரு வாரங்களில் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.