

சென்னை: மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், அந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
சென்னை, மெரினா கடற்கரையின் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள லூப் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் உத்தரவிட்டது.
இருப்பினும் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை எனக்கோரி, ஆனந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், லூப் சாலையை ஆக்கிரமித்து சாலையோரங்களில் உணவகங்கள் அனுமதியின்றி வணிக நோக்கில் நடத்தப்படுவதாகவும், இந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் மீண்டும் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் எனக்கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒருவேளை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை என்றால் அதை எதி்ர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தானே தொடர முடியும், என்றனர்.
அதையடுத்து, மனுதாரர் தரப்பில், இந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.