அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

Updated on
1 min read

சென்னை: அதிமுக எம்எல்-க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்துள்ளதாகக் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த மே 13 ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய அதிமுக சார்பில் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.

அது நிலுவையில் இருந்த போது, மே 25ம் தேதி தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்த மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்தியபாமா ஆகியோரும், மே 26 ஆம் தேதி அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் பதவிகளை ராஜினாமா செய்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெக-வில் இணைந்தனர்.

அவர்களுக்கு தலைமைச் செயலகத்திலேயே தவெக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இடைத்தேர்தலில் நான்கு பேருக்கும் சீட் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. அரசியல் லாப நோக்குடன் நான்கு எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்துள்ளதால், இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்துள்ளது என்பதால், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என மனுவில் கோரப்பட்டுள்ளது.

மேலும், இடைத்தேர்தலுக்கு ரூ.100 கோடி வரை அரசுக்கு செலவு ஏற்படும் என்பதால், லாப நோக்குடன் ராஜினாமா செய்து விட்டு, கட்சி மாறிய நான்கு பேரையும் குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், “முறைகேடுகள் நடந்துள்ளது எனக் கூற என்ன ஆதாரம் உள்ளது?. ஆதாரங்கள் இல்லாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது,” என்றனர்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நான்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நாளிலேயே, ஆளுங்கட்சியில் இணைந்த விஷயத்தில் பெருந்தொகை சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது. தனிமனிதனாகிய மனுதாரரால் ஆதாரங்களை சேகரிக்க முடியாது என்பதால், சிபிஐ விசாரணை கேட்பதாக குறிப்பிட்டார். இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

<div class="paragraphs"><p>சென்னை உயர் நீதிமன்றம்</p></div>
ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி: முதல்வர் விஜய் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in