

சென்னை: தவெக வேட்பாளரான சினோரா அசோக் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சினோரா அசோக்கும் போட்டியிட்டனர்.
இதில் சேகர்பாபு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். முன்னதாக வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 23-ம் தேதி மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் சேகர்பாபு, சினோரா அசோக் தரப்பினரிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது சேகர்பாபு தன்னை தாக்கியதாக சினோரா அசோக் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சேகர்பாபு தரப்பிலும் எதிர்தரப்பினர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சினோரா அசோக் அளித்த புகாரின் பேரின் வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் சேகர்பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சட்ட விரோதமாகக் கூடுதல், ஆபாசமாகப் பேசுதல், காயம் விளைவித்தல், கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.