தஞ்சையில் உள்ள ‘மோடி’ சுவடிகளை மொழி பெயர்க்க கோரி வழக்கு

தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
தஞ்சையில் உள்ள ‘மோடி’ சுவடிகளை மொழி பெயர்க்க கோரி வழக்கு
Updated on
1 min read

மதுரை: தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் ‘மோடி’ சுவடிகளை தமிழில் மொழி பெயர்க்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தஞ்சை பூதலூரைச் சேர்ந்த ஜீவகுமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மராட்டியர் காலத்தில் அதிகாரப்பூர்வப் பதிவுகள் மற்றும் கடிதம் எழுத "மோடி" எனப்படும் சிறப்பு எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. மோடி என்பது மராத்தி மொழியுடன் தொடர்புடைய ஒரு வரலாற்று சாய்வெழுத்து வடிவம். சரஸ்வதி மஹால் நூலகத்தில் மோடி பதிவுகள் உள்ளன. இதை தஞ்சை ராஜ் பதிவுகள் என்கிறார்கள்.

இவை பிரிட்டிஷ் அரசாங்க நிர்வாகிகள் தொடர்பான ஆவணங்கள், மாவட்டத் தகவல்கள் மற்றும் கோயில் நிர்வாகம், அரண்மனை நிர்வாகப் பதிவுகள் என பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 1970 முதல் 1978-ம் ஆண்டு வரை சில ஆவணங்கள் மொழிபெயர்க்கப்பட்ட நிலையில் ஏராளமான ஆவணங்கள் இன்னும் முறையாகப் படியெடுக்கப்பட்டு மொழிபெயர்க்கப்படாமல் உள்ளன.

இந்த ஆவணங்கள் மொழிபெயர்க்கப்பட்டால் 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் தஞ்சையின் வரலாறு, நிர்வாகம், சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் மதிப்புமிக்க விவரங்கள் தெரியவரும். எனவே, தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மோடி சுவடிக் கட்டுகளைப் படியெடுத்து, மொழிபெயர்ப்புச் செய்யவும், அதற்கு மோடி எழுத்துமுறையில் நிபுணத்தும் கொண்டவர்களை நியமிக்கவும் ஆவணங்களைப் படியெடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியம் வாதிட்டார். பின்னர் நீதிபதிகள் மனு தொடர்பாக தமிழகப் பள்ளிக் கல்வி, நிதி, தொல்லியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.16-க்கு தள்ளிவைத்தனர்.

தஞ்சையில் உள்ள ‘மோடி’ சுவடிகளை மொழி பெயர்க்க கோரி வழக்கு
தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை இல்லை: டிஜிபி விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in