

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பெற்ற 4 கோடி ரூபாயை திருப்பித் தராமல் ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, ஆலங்குடி அதிமுக வேட்பாளர் தனவிமல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல் தாக்கல் செய்துள்ள மனுவில், சட்டப்பேரவை தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்ததாகக் கூறியுள்ளார்.
இதுசம்பந்தமாக அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தன்னை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தேர்தல் செலவுகளை மேற்கொள்ளும் தகுதியை நிரூபிக்க ரூ.5 கோடி தரும்படி வலியுறுத்தினார். மேலும், வேட்பாளர் பட்டியல் அறிவித்ததும் பணத்தை திருப்பித் தந்து விடுவதாக உறுதியளித்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 4 கோடியே 50 லட்சம் ரூபாயை திரட்டி, சி.விஜயபாஸ்கர் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் சோத்துப்பாலை முருகேசன் என்பவரிடம் கொடுத்ததாகவும், வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் செலவுகளுக்காக பணத்தை திருப்பிக் கேட்டபோது, 50 லட்சம் ரூபாய் மட்டுமே திருப்பி தந்ததாகவும், மீதமுள்ள தொகையை தராமல் இழுத்தடித்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது சி.விஜயபாஸ்கர், ஆளும் தவெக-வில் இணைந்துள்ள நிலையில், பணத்தை திருப்பிக் கேட்ட போது மிரட்டல் விடுத்ததாகவும், இதுசம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.