

சென்னை: தமிழகத்தில் மின் மாற்றிகள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் நடைபெறும் ஆரம்பகட்ட விசாரணை குறித்த ஆவணங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021-23 காலகட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்காக 28 ஆயிரம் மின் மாற்றிகளை கொள்முதல் செய்ததன் மூலமாக அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் டான்ஜெட்கோ தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்கக் கோரி அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதே கோரிக்கையுடன் அதிமுக நிர்வாகி சரவணன் உள்ளிட்ட மேலும் இருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், ‘மின் மாற்றிகளை கொள்முதல் செய்ய 30 ஒப்பந்ததாரர்கள் ஒரே விலையை குறிப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு அதிக விலைக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டு புகார் அளித்து நான்கு மாதங்களாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்த வழக்கு தொடரப்பட்டது’ என்றார்.
அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘இந்த விவகாரம் தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசின் ஒப்புதலைப் பெற்று, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ஆரம்பகட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். மின்மாற்றிகளைக் கொள்முதல் செய்ய கடந்த 1987-ம் ஆண்டு முதல் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறதோ. அதே நடைமுறைப்படியே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து பல ஆண்டுகளாக ஒரே விலையைத் தான் குறிப்பிடுகின்றனர். இதனால் அரசுக்கும் பாதிப்பு ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் இந்த ஒப்பந்தங்களை வழங்காவிட்டால், தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின்மாற்றிகளை மாற்ற முடியாது’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘இதுபோன்ற முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் ஆரம்பகட்ட விசாரணை தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருந்தால் இந்த வழக்குகள் தொடரப்பட்டு இருக்காது. எல்லா வழக்குகளிலும் ஆரம்பகட்ட விசாரணை நடத்துகிறோம் எனக் கூறினால், முடிவை எட்டவே முடியாது’ என கருத்து தெரிவித்தனர்.
பின்னர் இந்த வழக்குகள் தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பான ஒப்பந்த ஒதுக்கீடு ஆவணங்களையும், முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் நடைபெற்று வரும் ஆரம்ப கட்ட விசாரணை குறித்த ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும், என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.