

சென்னை: அமைச்சர் நேரு மீது இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக்கூறி அதிமுக எம்.பி இன்பதுரை தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், இதுதொடர்பான உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு பணி நியமனங்களுக்கு ரூ.1,020 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள், அரசு உயரதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டி தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி இன்பதுரை உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
முகாந்திரம் இருக்கிறது: அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறை அனுப்பியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டுமென கடந்த பிப்.20 அன்று தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுப்படி இதுவரை அமைச்சர் நேருஉள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூறி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக அதிமுக எம்.பி இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவுக்குப்பிறகும் அமைச்சர் நேரு மீது இன்னும் வழக்குப்பதியாமல் தாமதம் செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.
அரசு வழக்கறிஞர்கள் தகவல்: அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, அமைச்சர் நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர். அதையடுத்து நீதிபதிகள், இந்த அவமதிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் பதில்அளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்குத் தள்ளிவைத்துள்ளனர்.