

ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் தேர்தல் விதியை மீறியதாக தளி எம்எல்ஏவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருமான ராமச்சந்திரன் உட்பட 2,500 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த 2-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் தனது கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினருடன் சந்தைபேட்டை மைதானத்திலிருந்து ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி தேர்தல் விதிகளை மீறியதாக பறக்கும்படை அதிகாரி பிரசாந்த்குமார் தேன்கனிக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்ட 2,500 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.