

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
புதுடெல்லி: அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேரின் தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்ட தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரின் முடிவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 25 அதிமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து கொறடா உத்தரவை மீறிய எம்எல்ஏக்கள்மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேரவைத்தலைவருக்கு மனு கொடுத்தார்.
இந்நிலையில் 25 எம்எல்ஏக்களில் 4 பேர் ராஜினமா செய்தனர். அதேவேளையில் 21 பேர் அதிமுக தலைமைக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை கோரிய மனுவை திரும்பப்பெற்று கொள்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதினார். அதனை ஏற்றுக்கொண்டு எந்த விசாரணையும் இன்றி எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவதாக ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.
பேரவைத் தலைவரின் இந்த செயல் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் கட்சித் தாவல் நடவடிக்கை தொடங்கியபின்னர் இவ்வாறு மன்னிப்பு வழங்க முடியுமா, எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கையை கைவிட முடியுமா, இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க பேரவைத்தலைவருக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரிவான விளக்கத்துடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.