

சென்னை: ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை அப்புறப்படுத்தக் கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில் ஈஷா அறக்கட்டளை சார்பில், கால பைரவர் எரிவாயு தகன மண்டபம் கட்ட கிராம பஞ்சாயத்து வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரியும், தகன மண்டபத்தை அப்புறப்படுத்த கோரியும், அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்துகள் கல்லறை மற்றும் சுடுகாடு விதிகள்படி குடியிருப்பு அல்லது குடிநீர் விநியோக ஆதாரத்தில் இருந்து 90 மீட்டர் தொலைவில் மயானம் அமைக்க உரிமம் வழங்குவதை தடை செய்யவில்லை என்றும் கிராம பஞ்சாயத்திடம் உரிமம் பெறுவது மட்டுமே முன்நிபந்தனை என்றும் விதிகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தகன மண்டபம் கட்டுவது சமூகத்திற்கு பயன்படும் என்றும், பொது நலனுக்கு எதிரானது என்று கூற முடியாது எனவும் கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.