

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தோல்வியடைந்தார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து, தவறான தகவலை தெரிவித்ததாக வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில், வீரமணியின் வருமானம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, வருமான வரித்துறைக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. வீரமணி தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்த சொத்துகளையும், அவரது வருமான வரிக் கணக்குகளையும் ஆய்வு செய்த வருமான வரித்துறை, 14 கோடி ரூபாய் அளவுக்கு வித்தியாசம் உள்ளதாக இடைக்கால அறிக்கை அளித்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்ததாக வீரமணிக்கு எதிராக தேர்தல் அதிகாரி, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், வருமான வரித்துறை முழுமையான விசாரணை நடத்தவில்லை எனக் கூறி, முழு விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, ராமமூர்த்தி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, ‘வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்ததாக தேர்தல் ஆணையம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. முழுமையான விசாரணை நடத்துவது குறித்து வருமான வரித்துறை முடிவு செய்யும். இதனால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்?’ எனக் கேள்வி எழுப்பியது.
மேலும், தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.