முறைகேட்டை தட்டிக் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் உள்ளிட்ட 3 பேர் மீதான வழக்கு ரத்து

முறைகேட்டை தட்டிக் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் உள்ளிட்ட 3 பேர் மீதான வழக்கு ரத்து
Updated on: 
1 min read

சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் நடந்த முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பியதற்காக சட்டக் கல்லூரி மாணவர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் பதிவு செய்திருந்த வழக்கை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தாரீஷ் பழனிச்சாமி, துரைசாமி முத்துகிருஷ்ணன், ஆறுமுகம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சாலை அமைக்கும் பணியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பியதற்காக, காவல்துறை அதிகாரிகளை தாக்க முயன்றதாகவும், அவர்களை பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும்கூறி போலீஸார் எங்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், எனக் கோரியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா, ‘சாலை அமைக்கும் பணியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக கேள்வி எழுப்பியவர்களை நாமக்கல் மாவட்டம் மொளசி போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரி்த்துள்ளனர். அதை வழக்கறிஞர் சரிதா தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது நடந்த நிகழ்வுகளை சரிதாவின் மகனும், சட்டக்கல்லூரி மாணவருமான தாரீஷ் பழனிசாமி தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். அவரது மொபைல் போனை பறித்த உதவி ஆய்வாளர் பிரியா மற்றும் மொளசி காவல் ஆய்வாளர் முரளி ஆகியோர் காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தாக்க முயன்றதாகவும் மனுதாரர்கள் மூவர் மீதும் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தனியார் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக புகார் அளித்த அதிகாரியே எப்ஐஆரை பதிவு செய்து, அந்த அதிகாரியே புலன் விசாரணையும் மேற்கொண்டு இறுதி அறிக்கையும் தயாரித்துள்ளார். இது எங்குமே நடைபெறாத ஒன்று’ எனக் கூறி, அங்கு நடந்த வீடியோ காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

வழக்கு தொடர்பான ஆவணங்களையும், பதிவான வீடியோ காட்சிகளையும் பார்வையிட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இது பொய் வழக்கு என்பது தெளிவாக தெரிகிறது எனக் கூறி சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், காவல் நிலையத்துக்குள் புகுந்து காவல் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்க முற்பட்டதாக சட்டக்கல்லூரி மாணவர் தாரீஷ் பழனிசாமி உள்ளிட்ட மூவர் மீதும் போலீஸார் பதிவு செய்திருந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

முறைகேட்டை தட்டிக் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் உள்ளிட்ட 3 பேர் மீதான வழக்கு ரத்து
“புதுச்சேரி அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்கு என்பது தவறான கருத்து” - அன்பழகன்

X