

சென்னை: தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் கூறப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்படும் என வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவுக்கும், கடந்த 2021-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த வேட்புமனுவுக்கும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாகக் கூறி அத்தொகுதி வாக்காளரான குமாரவேல் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், “உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021-ல் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் ரூ.7.36 கோடி முதலீடு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அந்த விவரம் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது மனைவி அதே ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் ரூ.2.63 கோடி முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ல் ஸ்னோ ஹவுசிங் நிறுவனத்துக்கு ரூ.11.06 கோடி கடன் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள உதயநிதி, தற்போது கடன் தொகை ரூ.10 கோடி என குறிப்பிட்டுள்ளார். எஞ்சிய ரூ.1.06 கோடி திருப்பி செலுத்தப்பட்டு விட்டதா என்பது குறித்தும் தெரிவிக்கவில்லை.
கடந்த 2020-ல் தனது வருமானம் ரூ.2 கோடி எனக் குறிப்பிட்டுள்ள உதயநிதி தற்போது ரூ.10.98 கோடி வருமானம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வருமானம் மற்றும் சொத்து அதிகரிப்பு குறித்து வேட்புமனுவில் உரிய விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை. எனவே இதுதொடர்பாக வருமான வரித்துறை மற்றும் கம்பெனி விவகாரத்துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இதுதொடர்பாக வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வருமான வரித்துறை புலனாய்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் துணை இயக்குநரான ஜி.சுதர்சன் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் சொத்து விவரங்களில் கூறப்பட்டுள்ள விவரங்களை சரிபார்க்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை நேரடி வரிகள் வாரியம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் முடிவுகள் வெளியானதும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் கூறப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் தாமாக முன்வந்து சரிபார்க்கப்படும்.
இந்த பணிகளை 150 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலி்ன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா தொடர்பான கடந்த 5 ஆண்டுகால வருமான வரி தாக்கல் தொடர்பான விவரங்களையும், சொத்து விவரங்களையும் விரிவான ஆய்வு மேற்கொள்ளாமல் தற்போது எந்த ஒப்பீடும் செய்ய முடியாது.
தற்சமயம் அதுதொடர்பான ஆவணங்கள் எங்கள் கைவசம் இல்லை என்பதால் அவற்றை ஆய்வு செய்ய போதிய அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது. அதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.