

திருவிக நகர் தொகுதி செல்வ விநாயகர் கோயில் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன். | படங்கள்: ம.பிரபு |
திரு.வி.க.நகர் தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக - கே.எஸ்.ரவிச்சந்திரன் திமுக வேட்பாளரான கே.எஸ்.ரவிச்சந்திரன், கடந்த 5 ஆண்டு கால திமுக அரசின் சாதனைகளை முன்வைத்து, பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பட்டா கோரிக்கைகள் சட்டரீதியாகப் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள அனைவருக்கும் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரமான குடிநீர் விநியோகம் 24 மணி நேரமும் உறுதி செய்யப்படும் என உறுதி அளித்து வருகிறார்.
ஏகாங்கிபுரம் 74-வது வட்டத்தில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.
அதிமுக - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
அதிமுக வேட்பாளராக, மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுகிறார் வீடு வீடாகச் சென்று பெண்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத, பாதுகாப்பான திரு.வி.க நகரை உருவாக்குவதே எனது லட்சியம் என அவர் உறுதிமொழி அளித்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி - ஜெகதீஷ் சந்தர்
நாதக வேட்பாளரான ஜெகதீஷ் சந்தர், தொகுதி இளைஞர்களின் எதிர்காலத்தை மையப்படுத்தி தரமான கல்வி இலவசமாகக் கிடைக்க வேண்டும்.
புளியந்தோப்பில் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்த நாதக வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர்.
திரு.வி.க நகர் இளைஞர்கள் கூலிகளாக இல்லாமல், தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பைப் பெற்றுத் தலைநிமிர்ந்து வாழ வழிவகை செய்வதே எனது முதல் இலக்கு என உறுதி அளித்து வருகிறார்
தமிழக வெற்றிக் கழகம் - எம்.ஆர்.பல்லவி
தவெக வேட்பாளரான எம்.ஆர்.பல்லவி, வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இத்தனை காலம் ஆட்சி செய்தவர்களுக்கு மாற்றாக, ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை வழங்கத் துடிக்கும் இந்த இளைய தலைமுறைக்கு ஒருமுறை வாய்ப்பளியுங்கள் என வேண்டுகோள் விடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
திரு.வி.க நகரில் தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் எம்.ஆர்.பல்லவி.
தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் திரு.வி.க,நகர் தொகுதியில் வேட்பாளர்களின் பிரச்சாரமும் தீவிரமடைந்துள்ளது.