

எழும்பூர் தொகுதி, புரசைவாக்கம் தானா தெருவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னா
எழும்பூர் தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் 10 சுயேச்சைகள் என மொத்தம் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திமுக - தமிழன் பிரசன்னா
திமுக சார்பில் அக்கட்சியின் செய்தித்தொடர்பு இணை செயலாளராக உள்ள தமிழன் பிரசன்னா களம் காண்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் செய்த சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் பட்டியலிட்டு ஆதரவு திரட்டி வருகிறார்.
மேலும், பிரச்சாரத்தில் மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நிறைவேற்றுவதாகவும், விளையாட்டு மைதானம், பயிற்சி மையங்கள் ஏற்படுத்தி தருவதாகவும் வாக்குறுதி அளித்து வாக்குகளை சேகரித்து வருகிறார்.
அதிமுக - அபிஷேக் ரங்கசாமி
அதிமுக தென்சென்னை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் அபிஷேக் ரங்கசாமி அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
சூளை, கேபி பார்க் பகுதியில் அதிமுக வேட்பாளர் அபிஷேக் ரங்கசாமியை மாலை அணிவித்து வரவேற்ற வாக்காளர்கள்.
திமுகவின் ஆட்சியில் நிறைவேற்றாமல் இருக்கும் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டியும், தொகுதியில் நிலவும் பிரச்சினைகளைப் பட்டியலிட்டும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை, ஒவ்வொரு வீட்டுக்கும் தூய்மையான குடிநீர் கொண்டு வரப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அவர் முன்வைக்கிறார்.
நாம் தமிழர் கட்சி - சரண்யா
நாதக சார்பில் சரண்யா போட்டியிடுகிறார். தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு, பாதாளச் சாக்கடை போன்ற மக்களின் அன்றாடத் தேவைகள் நிறைவேற்றப்படும். கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை வழங்கி, வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
சூளை பகுதியில் ஆட்டோவில் தெரு, தெருவாகச் சென்று வாக்கு சேகரித்த நாதக வேட்பாளர் சரண்யா.
தமிழக வெற்றிக் கழகம் - ராஜ்மோகன் தவெக வேட்பாளராக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் போட்டியிடுகிறார். ஊழல், போதைப்பொருள் ஒழிப்பு, பெண்களுக்குப் பாதுகாப்பு ஆகியவற்றை பிரச்சாரத்தில் முதன்மையாகக் கொண்டுள்ளார்.
வாக்கு சேகரிப்பின்போது குழந்தையைக் கொஞ்சி மகிழும் தவெக வேட்பாளர் ராஜ்மோகன்.
மேலும், மக்களுடன் கலந்துரையாடி வாக்கு சேகரித்து வருகிறார். எழும்பூர் தொகுதியில் பிரதான 4 கட்சிகளுக்கிடையே போட்டி பலமாக உள்ளது. இதனால் வெற்றிக் கனியை பறிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது.