

சென்னை: ‘எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் ரோல் மாடல் எனக் கூறிவிட்டு, அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் கூறுவது தவறு’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அண்ணா நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மரியாதை செய்தபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, ஓரணியில் இணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே புள்ளியில் ஒன்றிணைந்திருக்கிறோம். அதுதான் பாஜகவின் கொள்கையும். இதில் எந்த அழுத்தமும் இல்லை. அதேபோல் கூட்டணியில் 6 முதல் 7 இடங்கள்தான் அமமுகவுக்கு என்று பரவும் செய்திகளையும் பொய் என்பதை நிரூபிப்போம்.
தவெக தலைவர் விஜய் தனது ரோல் மாடலாக எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் கூறிவிட்டு, 2021 வரை நடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செங்கோட்டையனையும் சேர்த்துகொண்டு, ‘அதிமுகவை ஊழல் கட்சி’ என்று கூறுவது தவறு. சுற்றியிருப்பவர்கள் சொல்வதை மட்டும் கேட்காமல் அவர் கொஞ்சம் வெளியே வந்து பார்க்கவேண்டும். விஜய் எங்களுக்கு எதிரி அல்ல. எங்களது ஒரே எதிரி திமுகதான்.
பழனிசாமியைப் போலவே, பிரிந்து சென்ற ஓபிஎஸ், செங்கோட்டையன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் எனக்கு அண்ணன்கள்தான். அவர்கள் பிரிந்து சென்றதில் எங்களுக்கு வருத்தம் உண்டு. ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் அமையவேண்டும் என்பதில் ஏதாவது ஒரு வழியில் பன்னீர்செல்வம் உறுதுணையாக இருக்க வேண்டும். போன தேர்தலில் நாங்கள் பிரிந்து இருந்ததால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதை உணர்ந்து இப்போது அனைவரும் ஒன்றிணைந்திருக்கிறோம்” என்றார் தினகரன்.