

சென்னை: “நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? அதற்கான தகுதி எனக்கு உள்ளதா” என மக்களிடம் கருத்து கேட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாக பரவிவரும் தகவலுக்கு விளக்கம் தருவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார். அதன்படி இன்று சமூக வலைதளத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். சுமார் 18 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவை குட்டி கதையுடன் அவர் தொடங்கினார்.
“திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிட வேண்டுமென்றால் நான் முதலில் அரசியலுக்குள் வர வேண்டும். நான் செய்து வரும் சமூக சேவை குறித்து நீங்கள் அனைவரும் அறிவீர்கள். என்னால் முடிந்த வரையில் அந்தப் பணியை மேற்கொண்டு வருகிறேன். அதன் பின்னர் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றேன்.
பின்னர் அரசியல் கட்சித் தலைவர் சீமான் அண்ணன் ஒரு விமர்சனம் வைக்கிறார். அதற்கு நான் பதில் அளித்திருந்தேன். அதுதான் அரசியலில் எனக்கு தொடக்கப்புள்ளி எனக் கருதுகிறேன்.
தொடர்ந்து ரஜினி சார் அரசியலுக்கு வரக் கூடாது என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. அதற்கு நான் ஆதரவு தரும் வகையில் செயல்பட விரும்பினேன். அப்போது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அது குறித்து எங்கள் வீட்டில் சொன்ன போது அரசியலுக்கு வர வேண்டாம் என என் அம்மா சொன்னார். அதன் பின்னர் கரோனா தொற்று பரவல் ஏற்பட்டது. அந்தச் சூழலில் தான் அரசியலுக்கு வரவில்லை என ரஜினிகாந்த் அறிவித்தார்.
அந்தச் சூழலில் நண்பர் விஜய் அரசியலுக்கு வருவதாக தெரிவித்தார். அவரது திரை பயணத்தில் இணைந்து நானும் பணியாற்றி உள்ளேன். அவர் சிறந்த உழைப்பாளி. அது குறித்து அம்மாவிடம் மீண்டும் சொன்னேன். அப்போதும் என் அம்மா அரசியல் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார். அது குறித்து எனது நண்பர்களுடன் பேசி இருந்தேன்.
தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியானதும் சரித்திரத்தை புரட்டி போடுகிறார். அது குறித்து அம்மாவிடம் சொன்னேன். நண்பரின் அந்த முகத்தை நம்பி வாக்களித்து உள்ளார்கள் என்று சொன்னேன். நல்லவர்களுக்கு மக்கள் வாய்ப்பு தருவார்கள் என்று சொன்னேன். அம்மாவும் அதை ஏற்றுக் கொண்டார். ‘நீ நெனச்சத பண்ணு’ என அம்மா சொன்னார்.
நான் அரசியலுக்கு வரலாமா? என எனது ரசிகர்களிடமும், மக்களிடமும் கேட்க விரும்புகிறேன். அதற்கான தகுதி எனக்கு உள்ளதா?. அதை கமெண்ட் மூலம் தெரிவியுங்கள். உங்கள் முடிவுக்காக நான் காத்திருக்கிறேன்” என அந்த வீடியோவில் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.