

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலையுடன் தங்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். இதையடுத்து, வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதி மாலை 6 மணி வரையிலான 48 மணி நேர அமைதி கால கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்ந்த நிலையில், இன்று காலை முதல் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சென்னையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின், ஆட்டோ ஓட்டியும், இளைஞர்களிடம் செல்ஃபி எடுத்தும் உற்சாகமாக பிரச்சாரம் செய்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தான் போட்டியிடும் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தான் போட்டியிடும் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் வாகனப்பேரணி சென்று வாக்கு சேகரித்தார். இன்று மாலையில் காரைக்குடி பாண்டியன் திரையரங்கம் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். நந்தனத்தில் நடந்த பிரச்சாரத்தில் விஜய் கலந்துகொண்டு பேசினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியிட்டது. அன்றைய தினமே நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர், நிலைக் கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
234 தொகுதிகளிலும் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 75,064 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பணியில் 83,875 போலீஸார், 40,427 அரசுஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், வண்ணப் புகைப்படம், கட்சியின் சின்னம் ஆகியவை பொருத்தப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவை பலத்த பாதுகாப்புடன் நாளை (ஏப்.22) வாக்குச்சாவடி வாரியாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
‘அமைதி கால’ வழிகாட்டுதல்கள்:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதி மாலை 6 மணி வரையிலான 48 மணி நேர அமைதி காலத்தில் அரசியல் கட்சிகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டுதல்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஏப்.21-ம் தேதி மாலை 6 மணி முதல் 23-ம் தேதி மாலை 6 மணி வரை தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது.
தேர்தல் தொடர்பான விவகாரங்களை திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, குறுஞ்செய்தி, இணையம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற வலைதளங்கள் என எந்த வடிவிலான தகவல் தொடர்பு மூலமாகவும் மக்களின் பார்வைக்கு கொண்டுசெல்லக் கூடாது. மீறினால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் என தொகுதி வாக்காளர்கள் அல்லாத அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும்.
இன்று (ஏப்.21) முதல் ஏப்ரல் 23 வரை டாஸ்மாக் கடைகள், பார்களை மூடுமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.