

ராமேசுவரம்: இந்தியா-இலங்கை மீனவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய மீன்வளத்துறை செயலர் அபிலாக் ஷ் லிக்கியிடம் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் தலைவர் நல்லதம்பி, மத்திய மீன்வளத்துறை செயலர் அபிலாக் ஷ் லிக்கியிடம் வழங்கிய கடித விவரம்: இந்திய அரசு தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை 1974-ம் ஆண்டு இலங்கைக்கு கொடுத்தது. இதனால், கடந்த 52 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் துன்பத்தை மட்டுமே அனுபவித்து வருகிறோம். இதுவரை சுமார் 560-க்கு மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர்.
பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீனவர்களின் உடமைகள் அழிக்கப்பட்டுள்ளன. இதற்குத் தீர்வு காணும் பொருட்டு, இந்தியா- இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது.
ஆனால், 2016 ஆண்டு முதல் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. கடந்த செப்.25-ம் தேதி நடைபெறுவதாக இருந்த இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் தடைபட்டுள்ளது. எனவே, மத்திய அரசு இந்தியா- இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த ஆவண செய்ய வேண்டும். இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான குழுவில் இந்தியா-இலங்கை பாரம்பரிய மீனவர்களையும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும். பாக் நீரிணை பகுதி இரு நாடுகள் இடையிலான குறுகிய கடல் பகுதியாக இருப்பதால், அப்பகுதிக்கு பிரத்தியேக மீன்பிடி அறிவிப்பாணையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.