Published : 14 Jan 2022 05:24 AM
Last Updated : 14 Jan 2022 05:24 AM

மக்கள் வாழ்வில் செல்வத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும்- ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாளை கொண்டாடும் மக்கள் வாழ்வில் செல்வத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும் என ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட் டுள்ள வாழ்த்துச் செய்திகள்:

ஆளுநர் ஆர்.என்.ரவி: அறுவடைத் திருவிழாவான பொங்கல் நன்னாள், நமது வாழ்க்கைக்கான ஆற்றல் மற்றும் உயிரோட்டத்தை அளிக்கும் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விழாவாகும். தைத்திங்கள் தொடங்கும் நன்னாளில் இறைவனின் திருவருளைப் பெறுவதற்காக அவரை நாம் வழிபடுகிறோம். இத்திருநாள் அனைத்து மக்களின் வாழ்விலும் உடல்நலத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: ‘பொங்கலோ பொங்கல்’ என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதிலும் இந்த ஆண்டு புத்தாட்சி மலர்ந்த ஆண்டாக அமைந்திருப்பதால் மக்கள் மனதில் அரசியல்பூரிப்பும் இணைந்துள்ளது. உங்களில் ஒருவனான நான், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர வைக்கப்பட்டுள்ளேன். பொறுப்பேற்ற நொடியில் இருந்து உங்களுக்காகவே ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்து வருகிறேன். எட்டே மாதத்தில் ஏற்றமிகு திட்டங்களைத் தீட்டி வருகிறேன். ஐந்தாண்டு செய்ய வேண்டிய சாதனைகளைச் சில மாதங்களில் செய்தவன் என்று நடுநிலையாளர்கள் பாராட்டைப் பெற்றும் வருகிறேன். இத்தகைய பொற்கால ஆட்சியின் முதல் தைத்திருநாளைத்தான் உங்களோடு சேர்ந்து நானும் கொண்டாட இருக்கிறேன். அனைவருக்கும் தமிழர் திருநாள், தமிழ் இனநாள், பொங்கல் மகிழ்நாள், உழவர் உயிர்நாள், திருவள்ளுவர் வாழ்வியல்நாள் நல்வாழ்த்துகள்.

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜன்: தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான பொங்கல் திருவிழா, உழவுத்தொழிலுக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் பெருமை சேர்க்கும் திருவிழா. தைப்பொங்கல் திருநாளில் அனைவரது வாழ்விலும் எல்லா வளங்களும் பெருகி சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறேன்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி: உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல்திருநாளில், புதுமை பொங்க, இனிமை தங்க,செல்வம் பெருக, வளமை வளர, அனைவருக்கும் எங்களது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். கடினமாக உழைத்துவரும் நம் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தைக் கொண்டுவந்து சேர்க்கட்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: நலிவுகள் மலிந்தாலும், பொலிவுகள் மீண்டும் பெருகும் என்ற தன்னம்பிக்கைப் பொங்கும் பொங்கலாக தமிழ்ப் புத்தாண்டு தைப் பொங்கல் மலரட்டும். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழர்களின் மரபு வழிவந்த கலாச்சாரத்தின்படி, எந்தவொரு விஷயத்திலும் குடும்பத்தின் கூட்டு பொறுப்பு இருக்க வேண்டுமென்பதை பொங்கல் திருநாள் நமக்கு உணர்த்துகிறது. இவ்விழா சிறப்புற அமையட்டும் என வாழ்த்துகிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர்கே.பாலகிருஷ்ணன்: பொங்கல் திருநாள், உலகத் தமிழ் மக்கள் அனைவராலும் உவகையோடு கொண்டாடப்படும் பண்பாட்டு பெருவிழாவாகவும் திகழ்கிறது. இந்நாளை சாதி, மத பேதமற்ற சமத்துவப் பொங்கலாக கொண்டாடுவோம்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா.முத்தரசன்: ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற தன்னம்பிக்கை ஊட்டும் தைத் திருநாளில் தொழிலாளர்கள், விவசாயிகள் நலன் பேணும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் ஜனநாயகப் பாதையில் அணிவகுப்போம் என உறுதி ஏற்று, தை மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழர்களின் உழவையும், உழைப்பையும் போற்றும் திருநாளான தைப்பொங்கல் விழாவையும் தமிழ் புத்தாண்டையும் கொண்டாடும் தமிழ்ச் சொந்தங்கள் எல்லா நலமும், வளமும் பெற்று வாழவேண்டும். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

விசிக தலைவர் திருமாவளவன்: தலைமுறை தலைமுறையாக தமிழ் பெருங்குடி மக்கள் அறுவடைத் திருநாளாக கொண்டாடிவரும் பொங்கல் பெருவிழாவை, தமிழினத்தின் மதச்சார்பற்ற பெருவிழாவை பாதுகாக்கும் பொறுப்புணர்வுவோடு பொங்கல் பெரு நாளைக் கொண்டாடுவோம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: பொங்கல் திருநாளில் ஏழை மக்களின் வறுமை நீங்கிட இந்த நன்னாளில் சூளுரைப்போம். மக்கள்மனதில் இன்பம் பொங்கிட, விவசாயிகள் வாழ்வில் துயர் நீங்கிட, தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

வி.கே.சசிகலா: உலகத் தமிழர்கள் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியோடு கொண்டாடும் பொங்கல் திருநாளில், தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மதம் கடந்து சமத்துவ பொங்கலாக கொண்டாடும் இந்த நாளில் ஒற்றுமை ஓங்க, மதநல்லிணக்கப் பொங்கலாய் நாம் அனை வரும் கொண்டாடுவோம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழர்திருநாளான பொங்கல் திருநாளில் மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கட்டும், நாட்டில் வளர்ச்சிபெருகட்டும். வளமான தமிழகம், வலிமை யான பாரதம் அமையட்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பொங்கல் என்பது நமக்கு அறுவடைத் திருநாள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றுவதற்கும், போற்றி கொண்டாடுவதற்குமான திருநாள். கரோனா பாதிப்பு நீங்கி அனைவரும் அச்சமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்திட தைத்திருநாளில் வழி பிறக்கட்டும்.

பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை: உழைப்பின் உன்னதத்தை, இயற்கையின் மேன்மையை எடுத்துச் சொல்லும் நன்னாளாக தைத்திங்கள் பிறக்கும் பொங்கல்திருநாள் உள்ளது. தமிழ் மரபை போற்றும் பொங்கல் திருநாளை கொண்டாடும் அனைத்து பெருமக்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: வேளாண்மையை, ஒன்றுகூடலை, உறவு பேணலை, புதுமை விருப்பத்தை முன்னிறுத்தும் பொங்கல் நாளில் மகிழ்ச்சியே எங்கும் நிறைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்

மேலும், பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ் வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், சமக தலைவர் ரா.சரத்குமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உள்ளிட்டோரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x