அதிருப்தியாளர்களுக்கு பதவி - தாஜா செய்து தக்க வைக்கும் சி.விஜயபாஸ்கர்

அதிருப்தியாளர்களுக்கு பதவி - தாஜா செய்து தக்க வைக்கும் சி.விஜயபாஸ்கர்
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுகவில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளை வழங்கி சமாளித்து வருகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை அதிமுக வடக்கு மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஆலங்குடி, விராலிமலை, கந்தர்வக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளும், தெற்கு மாவட்டத்தில் திருமயம், அறந்தாங்கி ஆகிய 2 தொகுதிகளும் உள்ளன.

இதில், மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 3 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு விட்டன. எஞ்சிய 3 தொகுதிகளில் அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியிலும், தெற்கு மாவட்டச் செயலாளர் பி.கே.வைரமுத்து திருமயம் தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

ஆலங்குடி தொகுதியில் போட்டியிட கடும் போட்டி நிலவியதால், வேட்பாளரை அறிவிக்க முடியாத நிலை நீடித்து வந்தது. ஒரு வழியாக தன.விமல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எனினும், கட்சியில் நீண்ட காலமாக உழைத்தும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என கட்சியில் பலரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இதில், கடந்த 2016-ல் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த ஞான.கலைச்செல்வம், சென்னை அதிமுக அலுவலக வளாகத்திலேயே மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு அமமுகவில் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து விலகி வந்து மீண்டும் அதிமுகவில் இணைந்த குள.சண்முகநாதன், கட்சியில் இருந்து விடை பெறுவதாக தனது பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார்.

இதேபோல, மேலும் சிலர் வெளிப்படையாக கூறமுடியாமல் மனக்குமுறலில் இருப்பதாக அக்கட்சியினர் கூறினர். எனவே, தேர்தல் சமயத்தில் இவ்வாறு அதிருப்தி நீடித்தால் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் எனக் கருதிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அதிருப்தியாளர்களுக்கு பதவி கொடுத்து சரிகட்ட முடிவு செய்து, இதுகுறித்து பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு பரிந்துரை கடிதம் கொடுத்தார்.

அதன் அடிப்படையில், ஆலங்குடி தொகுதியில் அதிருப்தியாளர்களாக இருந்த குள.சண்முகநாதனுக்கு மாநில விவசாயஅணி துணை செயலாளர் பதவியும், என்.நெவளிநாதனுக்கு மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பதவியும், ஏ.கே.முத்துவுக்கு எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், புதுக்கோட்டை தொகுதிக்கு முயற்சித்த முன்னாள் எம்எல்ஏ இரா.நெடுஞ்செழியனுக்கு வடக்கு மாவட்ட பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, 2021 தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தர்ம. தங்க வேலை மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிரச்சாரத்துக்கு வந்த பொதுச் செயலாளருக்கு கருப்பு கொடி காட்ட முயன்றோரை அழைத்து சமாதானப்படுத்தியதுடன், திருவரங்குளத்தை நான்காக பிரித்து ஆளுக்கொரு ஒன்றிய செயலாளர் பதவி மற்றும் சிலருக்கு பிற பதவிகளை வழங்கி சி.விஜயபாஸ்கர் சமாதானப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அதிருப்தியாளர்களுக்கு பதவி - தாஜா செய்து தக்க வைக்கும் சி.விஜயபாஸ்கர்
திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ‘டிக்’ செய்தது ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in