

மாதிரி படம்
மதுராந்தகம் / தாராபுரம்: மதுராந்தகத்தில் 893 தபால் வாக்குகளும் தாராபுரம் தொகுதியில் 1,201 தபால் வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்-6-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, மாவட்டதேர்தல் நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், மதுராந்தகத்தில் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணிகள் நேற்று தொடங்கின. இதற்காக, தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவின்பேரில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் மூலம், மேற்கண்ட தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்பட 931 வாக்காளர்கள் தபால் வாக்கும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும், இந்தச் சிறப்பு குழுவினர் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் வீடுகளுக்கே சென்று வாக்குகளை பெறும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 29-ம் தேதி நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் 893 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாராபுரம்: இதேபோல் தாராபுரம் தொகுதியில், தபால் வாக்களிக்கத் தகுதிபெற்ற 1,236 பேரில் 1,201 பேர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இங்கு கடந்த 22-ம் தேதி முதல் தேர்தல் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள், தகுதியான வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக மொத்தம் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, வாகனங்களில் சென்று வாக்காளர்களிடம் இருந்து தபால் வாக்குகள் பெறப்பட்டன.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் பணி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல் பணியில் உள்ள காவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் பணி வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.