

தவெக தலைவர் விஜய் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் ‘ரோடு ஷோ’ நடத்த முடிவு செய்தார். இதற்காக கடந்த சில தினங்களாக அக்கட்சியினர் காவல் துறையிடம் அனுமதி கேட்டு வந்தனர்.
இதுதொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். காவல் துறை உயரதிகாரிகளையும் சந்தித்தார். நேற்று முன்தினம் புஸ்ஸி ஆனந்துடன் தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் வந்து முதல்வர் ரங்கசாமி மற்றும் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, காவல்துறை உயரதிகாரிகளை அழைத்துப் பேசினார். இதில் உள்ள சட்டம் - ஒழுங்கு சிக்கல்களை காவல்துறை தரப்பில் முதல்வருக்கு சுட்டிக்காட்டினர். இதைத் தொடர்ந்து ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும், பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அறைக்கு டிஜிபி ஷாலினி சிங், ஐஜி அஜிஸ்குமார் சிங்லா, டிஜஜி சத்தியசுந்தரம் உள்ளிட்டோர் வந்தனர். அதைத்தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனும் அங்கு வந்தார். அவர்கள் இப்பிரச்சினைப் பற்றி முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீண்டும் முதல்வரைச் சந்திக்க சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அறைக்கு வந்தார். முதல்வர் ரங்கசாமியை அவர் ஐந்தாவது முறையாக ‘ரோடு ஷோ’ அனுமதிக்காக சந்தித்தார். சுமார் 10 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்தது. அவர் பேசிச் சென்றதும் முதல்வர் ரங்கசாமி காவல் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து மீண்டும் பேசினார்.
இதுபற்றி காவல் துறை மற்றும் முதல்வர் அலுவலக வட்டாரங்களில் விசாரித்தபோது, “விஜய் ‘ரோடு ஷோ’வுக்காக தவெக-வினர் குறிப்பிடும் சாலை பகுதி மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதி என்பதால் மறுக்கப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் சிவாஜி சிலை தொடங்கி கொக்கு பார்க் வரை சுமார் 1.5 கிமீ தொலைவுக்கு விஜய் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர்.
இப்பகுதியில் சாலை அகலமாக இருக்கும் என்று புஸ்ஸி ஆனந்த் முதல்வரிடம் தெரிவித்தார். இடத்தை மாற்றினாலும் ‘ரோடு ஷோ’வுக்கு அனுமதி தரக்கூடாது என்பதில் காவல் துறை அதிகாரிகள் உறுதியாக இருக்கின்றனர். அதேசமயம் புதுச்சேரி புறநகர் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த விண்ணப்பிக்கலாம் என்று விஜய் கட்சியினருக்கு ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது” என்றனர்.
அமைச்சர் பேட்டி: இதனிடையே, பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் ஜான்குமார் நேற்று கூறுகையில், ‘‘விஜய் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி கொடுக்கலாம். கரூர் சம்பவத்தை வைத்து ஒரு மாஸ் லீடருக்கு அனுமதி மறுப்பது தவறு. அவ்வாறு அனுமதி கொடுக்கும் போது, ‘தமிழக மக்கள் புதுச்சேரிக்குள் வரக்கூடாது’ என்ற நிபந்தனையை விதிக்கலாம். புதுச்சேரி மக்களுக்காக மட்டுமே ‘ரோடு ஷோ’ நடத்த வேண்டும். தமிழக மக்களை எல்லைகளில் தடுக்க வேண்டும்.’’ என்றார்.