

சென்னை: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் கலப்பு 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியில் இடம்பெற்ற தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளத்தில் பதிவில், ‘ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் கலப்பு 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜனுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜனின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது இவ்வெற்றி தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது. அவர் தொடர்ந்து பல சாதனைகள் படைத்து, நாட்டின் பெருமையை உலக அரங்கில் மேலும் உயர்த்திட எனது வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.