

சென்னை: ஆசிய விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் ஆடவர் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்துத் தெரிவித்து, ஊக்கத் தொகையும் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் ஆடவர் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஹரிஹரனுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
ஹரிஹரனின் திறமையைப் பாராட்டும் வகையில், அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 'ELITE Sportsperson Scheme' திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுவரும் ஹரிஹரனின் இந்த சாதனை, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு மிகப் பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.
விளையாட்டு வீரர்களின் கனவுகளுக்கு தமிழ்நாடு அரசு என்றும் தோள்கொடுக்கும். ஹரிஹரன் மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.