

லிப்ட், ஏசி காத்திருப்பறை, பார்க்கிங் வசதி என பல் வேறு மேம்பாட்டு பணிகள் முடிவுற்ற நிலையில், புதுப்பொலிவுடன் திறப்பு விழாவுக்கு பொம்மிடி ரயில் நிலையம் தயார் நிலையில் உள்ளது.
தருமபுரி மாவட்டத்தின் மிக முக்கியமானரயில் நிலையங்களில் மொரப்பூருக்கு அடுத்து பெரியதாக அமைந்துள்ளது பொம்மிடி ரயில் நிலையம். இங்கிருந்து தினசரி நூற்றுக்கணக்கான பயணிகள் ரயில்கள் மூலம் சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பதி, பெங்களூரு மற்றும் வட மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையமாக மாறி வரும் பொம்மிடி ரயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சார்பில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் மூலமாக சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பொம்மிடி ரயில் நிலையத்திற்கு ரூ.16 கோடி மதிப்பில் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்தின் கீழ் ரயில் பயணிகள் நிற்பதற்கான நீண்ட தூரத்திற்கு முழுமையாக நிழல் கூடம், குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணிகள் காத்திருப்பறை, முகப்பில் ரயில் நிலையம் குறித்த அலங்கார வளைவு. முன்புற முகப்பு கட்டிட சீரமைப்பு, ரயில் நிலையத்தின் வாயில் வரை வாகனங்கள் வந்து செல்லும் வசதி, பயணிகளின் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிட வசதி, நவீன கழிப்பறைகள், அடுத்த பிளாட்பாரங்களுக்கு செல்ல லிப்ட் வசதியுடன் கூடிய நடைமேடை, குடிநீர் வசதி, பளபளப்பான தரைத்தளங்கள் என நவீன மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள பழைய முகப்பு கட்டிடங்களின் சுவர்கள் புதுப்பிப்பு, புதிய தளங்கள் அமைப்பு, பயணிகளுக்கான நிழற்கூடங்கள், ரயில் நிலையத்தினுள் நுழையும் வாசல் பகுதியில் பிரம்மாண்ட வரவேற்பு தூண்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட அனைத்தும் முடிவுற்று திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளன.
இதேபோல் மொரப்பூர் ரயில் நிலையத்திலும் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நடைமேடை விரிவாக்கம், மின் தூக்கிகள் மற்றும் பயணிகளுக்கான நவீன வசதிகள், புதியக்கட்டிடங்கள், பூங்கா, நுழைவு வாயில் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் முடிவுற்றுள்ளன.
இது குறித்து ரயில்வே நிர்வாகத்தினர் கூறுகையில், பொம்மிடி, மொரப்பூர் ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தும் முடிவுற்றுள்ளன. இம்மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்திற்குள் மக்களின் பயன்பாட்டுக்காக அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், ரயில் பயணிகள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூறும்போது, பொம்மிடி ரயில் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். சிறுவர் பூங்கா மற்றும் திருமண மண்டபம், பயணிகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வகையில், அனைத்துபகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா ஆகிய வசதிகளையும் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.