மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு: பிஎம்எஸ் தொழிற்சங்கம்

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு: பிஎம்எஸ் தொழிற்சங்கம்

Published on

மதுரை: மத்திய அரசின் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என பிஎம்எஸ் அமைப்பு செயலாளர் தங்கராஜ் கூறியுள்ளார்.

மத்திய அரசு 29 பழைய தொழிலாளர் சட்டங்களுக்கு பதிலாக ஊதியச் சட்டம், தொழில்துறை உறவுகள் சட்டம், சமூகப் பாதுகாப்புச் சட்டம், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் என 4 புதிய சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டங்களுக்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய அரசின் நான்கு புதிய தொழிலாளர் சட்டம் குறித்து தொழிலாளர் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என பாஜக சார்பு தொழிற்சங்கமான பிஎம்எஸ் அமைப்பு செயலாளர் தங்கராஜ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று கூறியதாவது: மத்திய அரசின் நான்கு தொழிலாளர் சட்டங்களையும் வரவேற்கிறோம். புதிய சட்டங்கள் அமைப்பு சாரா தொழிலார்களுக்கு பலனளிக்கும் சட்டங்களாகும். புதிய சட்டங்கள் அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் 24 மணி நேரம் பணிபுரியலாம்.

ஆண்களை போல் பெண்களும் ஒரே மாதிரி பணிபுரியும் போது ஒரே மாதிரி சம்பளம் வழங்க வேண்டும். ஒரு கம்பனியில் 10 தொழிலாளர் இருந்தாலும் இஎஸ்ஐ வசதி வழங்க வேண்டும். பழைய சட்டங்களில் பணியின் போது விபத்து நடந்தால் மட்டுமே இழப்பீடு பெற முடியும். புதிய சட்டத்தில் வீட்டிலிருந்து வேலைக்கு புறப்படுவதில் இருந்து வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் வரை எப்போது விபத்து நடந்தாலும் இழப்பீடு பெற முடியும்.

40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். உணவு விநியோகம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பதிய தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்றவாறு புதிய சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய நான்கு சட்டங்களில் இரு சட்டங்களை முழுமையாக வரவேற்கிறோம். தொழில்துறை உறவுகள் சட்டம், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டங்களில் 12 திருத்தங்கள் கொண்ட வர மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

நூறு பேர் பணிபுரியும் இடங்களில் தொழிற்சங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில், தற்போது புதிய சட்டத்தில் தொழிலாளர் எண்ணிக்கையை 300 ஆக உயர்த்தியுள்ளனர். இதை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளோம். புதிய சட்டத்தில் இஎஸ்ஐ வசதி பெற தகுதியான ஊதியமாக ரூ.21 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை ரூ.42 ஆயிரமாக உயர்த்த கோரியுள்ளோம்.

புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு நாடு முழுவதும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. மத்திய அரசு எதை கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற மனநிலை தமிழகத்தில் மட்டும் உள்ளது. இதனால் நான்கு தொழிலாளர் சட்டங்களின் நன்மைகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவில் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு: பிஎம்எஸ் தொழிற்சங்கம்
தொழில்நுட்பக் கோளாறு: நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் விமான சேவை பாதிப்பு!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in