

யாழ்ப்பாணத்திலுள்ள குறிகட்டுவான் இறங்குதுறை கடற்கரையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த இலங்கை மீனவர்கள்.
ராமேசுவரம்: இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, ரோலர் மடி, சுருக்கு மடி மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி இலங்கை கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக விசைப்படகு மீனவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இறங்குதுறை கடற்கைரையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவும் அந்நாட்டு மீன்வளத் துறையினரிடம் அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
அத்துமீறி நுழைந்து... யாழ்குடா, நெடுந்தீவு, நயினாதீவு, வேலணை, எழுவைத்தீவு, அனலைத்தீவு, பாக்நீரிணை மற்றும் மன்னார் ஆகிய இலங்கைக் கடலோரப் பகுதிகளில் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதால் பாரம்பரிய இலங்கை மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தையும், கடல் வளத்தையும் இழந்து தவிக்கின்றனர்.
வலைகள் சேதம்: காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த தமிழக இழுவை மடி விசைப்படகுகளால் இலங்கை மீனவர்களின் நண்டு வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கோரிக்கை மனுவில் இலங்கை மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.