

நயினார் நாகேந்திரன்.
சென்னை: “திருப்பூரில் போராட்டத்தில் பங்குபெற வந்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலையை காவல் துறை கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக அரசின் பாசிச போக்குக்கு பாஜக அஞ்சாது” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை சின்ன காளிபாளையத்தில் கொட்டி வந்த திமுக அரசை எதிர்த்து ஒரு மாத காலமாக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று போராட்டத்தில் பங்குபெற வந்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவருமான அண்ணாமலையையும், பாஜக நிர்வாகிகளையும் ஏவல் துறை கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
மக்கள் குடியிருக்கும் பகுதியில் குப்பையை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியதோடு போராடும் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய திமுக அரசுக்கு பாஜக சார்பாக ஏற்கெனவே நான் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இன்று மக்கள் போராட்டத்துக்கு பாஜகவின் ஆதரவைத் தெரிவிக்க வந்த தாமரை சொந்தங்களையும் திமுக அரசு கைது செய்திருப்பது அதன் பாசிச போக்கை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
அறவழியில் போராட முயன்ற தலைவர்களை சர்வாதிகார முறையில் அடக்கி ஒடுக்க முனையும் திமுக அரசுக்கு, குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த திராணியில்லையா? அல்லது மனமில்லையா?
மொத்தத்தில், பொதுமக்கள் நலனை தூக்கியெறிந்து, பாசிசத்தை மட்டுமே தூக்கிப் பிடிக்கும் திமுக அரசு தனது அகங்காரத்தாலேயே வீழும் நாள் தொலைவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.