

புதுடெல்லி: தமிழத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியை (என்டிஏ) வலுப்படுத்துவதில் பாஜக தீவிரம் காட்டுகிறது.
அதிமுக தலைவர்களை ஒன்றிணைத்தால் மட்டுமே திமுகவை வெல்ல முடியும் என்பது பாஜகவின் கணிப்பாக உள்ளது. கொங்கு சமூகத்துடன் தேவர் சமூகமும் இணைந்தால் தான் வெற்றி என்று நினைக்கிறது. ஆனால், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைவதை கடுமையாக எதிர்க்கிறார் இபிஎஸ். புதிய கட்சி தொடங்கி தினகரன் வழியில் கூட்டணி சேரவும் ஓபிஎஸ் தயாராக இல்லை. இச்சூழலை சமாளிக்க, ஓபிஎஸ்-ஐ ஆளுநராக நியமிப்பது குறித்து பாஜக பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறுகையில், "ஓபிஎஸ்-ஐ ஆளுநராக்க இபிஎஸ் தடையாக இருக்க மாட்டார். ஓபிஎஸ்-க்கு இப்பதவி வழங்குவதால் அவரது சமூகத்தினரும் ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி இறுதி முடிவு எடுப்பார்" என்று தெரிவித்தனர்.
மணிப்பூர் ஆளுநராக இருந்த தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் 2025 ஆகஸ்டில் மறைந்தது முதல் அப்பதவி காலியாக உள்ளது. இதன் கூடுதல் பொறுப்பு நாகாலாந்தின் ஆளுநர் ஏ.கே.பல்லாவிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மற்றொரு தமிழரும் பாஜக தலைவருமான சி.பி.ராதா கிருஷ்ணன், மகாராஷ்டிரா ஆளுநராக இருந்தார். இவர் குடியரசுத் துணைத் தலைவரானார். இதனால் மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்பு, கூடுதலாக குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவரத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்விரு மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் ஓபிஎஸ் ஆளுநர் பதவியில் அமர்த்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.