ஏன் இந்த அவசரம்? - பரந்தூர் திட்டம் ரத்து விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு பாஜக சரமாரி கேள்வி

பரந்தூர் சாலை | கோப்புப் படம்

பரந்தூர் சாலை | கோப்புப் படம்

Updated on
2 min read

சென்னை: “பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலங்களை உங்கள் அரசு என்ன செய்யப் போகிறது?” என்று முதல்வர் விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று முதல்வர் விஜய்யை டேக் செய்து வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “உங்களின் அரசியல் வீம்புக்காக தமிழகத்தின் வளர்ச்சியை முடக்காதீர்கள். விமான நிலையத்துக்கான மாற்று இடத்தை தேர்வு செய்யாமல், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக நீங்கள் சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது, தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கி இழுப்பதற்கான ஏற்பாடு.

பரந்தூர் விமான நிலையத்துக்கு மாற்று இடம் வேண்டி, இதுவரை எந்த கோரிக்கையும் மத்திய அரசிடம் வைக்காமல், எந்த இடத்தை தேர்வு செய்யப் போகிறோம் என்ற தெளிவும் இல்லாமல், எதற்காக இந்த அவசர முடிவு? விமான நிலையத்துக்கான இடத்தை புதிதாக தேர்வு செய்வது என்பது அத்தனை எளிதா?

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, பயணப் போக்குவரத்து, மணலின் தன்மை, அவசியம் மற்றும் தேவை (Need & Demand) மற்றும் பல அம்சங்களையும் கோணங்களையும் ஆராய்ந்ததன் அடிப்படையில் தான் புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தேர்தலின்போது பரந்தூரை நீங்கள் தேர்தல் பரப்புரைக் களமாக பயன்படுத்திக் கொண்ட ஒரே காரணத்துக்காக, விமான நிலையம் அமைப்பதற்கான மிகப் பெரிய செயல்முறையும் மீண்டும் முதலில் இருந்து துவங்க நீங்கள் முடிவு செய்திருப்பது, நேர விரயம், பண விரயம் மற்றும் வளங்களின் விரயம். உங்கள் தனிப்பட்ட அரசியல் ஆதாயத்துக்காக தமிழகத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் தடை போடுவது கண்டனத்துக்குரியது.

அதுமட்டுமன்றி, பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட1700 ஏக்கர் நிலங்களை உங்கள் அரசு என்ன செய்யப் போகிறது?

நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் படி, இந்த நிலங்களை விமான நிலையம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா?

மேலும் இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொண்டு தங்கள் நிலங்களை அரசுக்கு கொடுத்த மக்களுக்கு உங்கள் அரசு என்ன பதில் வைத்திருக்கிறது?

எனவே ஆரம்பம் முதலே எங்களின் கேள்வி ஒன்றே ஒன்று தான், தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைவது பிரச்சினையா அல்லது தமிழகத்துக்கு ஓர் புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சினையா என்று முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

3 சிலிண்டர் இலவசம் - பாஜக சாடல்

இதனிடையே, பாஜகவின் தேசிய செயலாளர் ம.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், “2026 தேர்தல் அறிக்கையில் மகளிர் நலன் என்ற தலைப்பில் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் என்ற குறுந்தலைப்பில் “ஒவ்வொரு குடும்பத்துக்கு வருடத்துக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் வாங்குவதற்கான தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்” என்று வாக்குறுதியளித்துவிட்டு, அதையே தேர்தல் பிரச்சாரமாக முன்வைத்தது தவெக.

ஆனால், ஆட்சி பொறுப்பேற்ற பின் அதற்கு நேர்மாறாக, விதி எண்.110-ன் கீழ் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் என்று அறிவித்திருக்கிறார் முதல்வர் விஜய். அதிலும், அன்று ”ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படும்” என அறிவித்துவிட்டு, இன்று ரூ. 2.5 லட்சம் ஆண்டு வருமானமுள்ளோருக்கு மட்டுமே விலையில்லா சிலிண்டர் என கூறுவது எப்படி நியாயமாகும்? வாக்களித்த மகளிரை ஏமாற்றி, பெரும்பாலான நடுத்தர குடும்பங்கள் பலன் பெறுவதை தடுப்பது தான் தூய சக்தியா?

கடந்த ஆட்சியில் திமுக தேர்தல் வாக்குறுதியில் என்னென்ன சொல்லப்பட்டதோ அதையெல்லாம் செய்யாமல் மக்களை ஏமாற்றி வந்தது. திமுக ஆட்சி எப்படி மக்களை ஏமாற்றி வந்ததோ அதுபோலவே தற்போதும் முதல்வர் விஜய் மக்களை முட்டாளாக நினைத்து தங்களை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றியிருக்கிறார்.

தான் சொன்னதையே செய்ய மனமில்லாமல் ஏமாற்றுவதையே நோக்கமாக கொண்ட அரசாக முதல்வர் விஜய் அரசு செயல்பட்டுவருகிறது. 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி என அறிவித்துவிட்டு அரைகுறையாக தள்ளுபடி செய்ததில் தொடங்கி, 6 சிலிண்டர் அறிவிப்பை 3 சிலிண்டராக குறைத்தது வரை தொடர்ந்து மக்களை ஏமாற்றி, முட்டாளாக்க நினைக்கும் முதல்வர் விஜய் முதலில் கடந்த தேர்தலில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

தங்களை முட்டாளாக நினைத்து ஏமாற்றியோரை மக்கள் எப்போதும் ஆட்சியில் தொடரவிட்டதில்லை. மக்களை ஏமாற்றியதற்கு விரைவில் உங்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>பரந்தூர் சாலை | கோப்புப் படம்</p></div>
“பரந்தூர் விமான நிலைய திட்டத்தைக் கைவிடுவது தமிழக வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளிவிடும்” - மு.க.ஸ்டாலின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in