பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் டிசம்பர் இறுதியில் தமிழகம் வர வாய்ப்பு: நயினார் நாகேந்திரன்

பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் டிசம்பர் இறுதியில் தமிழகம் வர வாய்ப்பு: நயினார் நாகேந்திரன்
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், இணைப் பொறுப்பாளர்கள் அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் மோஹல் ஆகியோர் வரும் 23-ம் தேதி தமிழகம் வர திட்டமிட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவின் உயர்மட்டக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ‘‘எனது யாத்திரை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஜனவரி 9-ம் தேதி அது முடிகிறது. அதற்கு பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அழைப்பது என நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்.

தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக இருக்கிறதா என கேட்கிறீர்கள். தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக இருக்கிறது. நாளைக்கு தேர்தல் என்றாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், நீங்கள் (பத்திரிகையாளர்கள்) ஏன் திமுகவிடம் இதுபற்றி கேட்பதே இல்லை. உங்கள் கூட்டணி வலுவாக உள்ளதா என்று முதல்வர் ஸ்டாலினிடம் என்றாவது நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?. திமுக கூட்டணியில் பல கட்சிகள் இருக்கலாம். ஆனால் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. 7,000-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. எல்லா இடங்களிலும் கஞ்சா போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. மாதம்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவே இல்லை. இவ்வளவு இருக்கும்போது மக்கள் எவ்வாறு திமுக ஆட்சியை மீண்டும் அங்கீகரிப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.

தமிழக தேர்தல் பொறுப்பாளர்கள் வரும் 23-ம் தேதி தமிழகம் வர திட்டமிட்டிருக்கிறார்கள். எனினும் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பியூஷ் கோயல் தற்போது வெளிநாடு சென்றுள்ளார். அவர் வருவது உறுதியானதும் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்’’ என கூறினார்.

பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் டிசம்பர் இறுதியில் தமிழகம் வர வாய்ப்பு: நயினார் நாகேந்திரன்
‘‘இஸ்ரேல் - இந்தியா உறவு மேலும் வலுப்பெறும்’’ - நெதன்யாகு சந்திப்புக்குப் பின் ஜெய்சங்கர் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in