

சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற மையக் குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்.
சென்னை: தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில், பி.எல்.சந்தோஷ் தலைமையில் மையக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் வருகை, கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் மையக் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்
றது. பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெற்றஇக்கூட்டத்தில் பாஜக தேசியச் செயலாளர் மா.வெங்கடேசன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்,தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா மற்றும் மூத்த தலைவர்கள் வானதி சீனிவாசன், கார்த்தியாயினி, பேராசிரியர் ராமசீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அக்.11-ம் தேதி, பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளார். அவருக்கு பாஜக சார்பில் அளிக்கப்பட வேண்டிய வரவேற்பு ஏற்பாடுகள் குறித்தும், இதற்காக நிர்வாகிகள் குழுவை அமைப்பது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
புதிய மாநிலத் தலைவர்: அதேபோல், தமிழக பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட மேலிடப் பொறுப்பாளர்கள் குறித்தும், அடுத்து வரவிருக்கும் பல்வேறு கட்ட நிர்வாகிகளின் நியமனங்கள் தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழக பாஜகவின் அடுத்த மாநிலத் தலைவராக நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதுகுறித்தும் மையக் குழுவில் விவாதிக்கப் பட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சரத்குமாரின் இல்லத்துக்கு நேற்று சென்று அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.