

சென்னை: தமிழக பாஜக ஆன்மிக பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழகத்தில் உள்ள ஆகம கோயில்களை கண்டறிந்து அதற்கான பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான பணியினை அறநிலையத்துறை தற்போது தொடங்கியுள்ளது.
கடந்த 70 ஆண்டுகளாக கோயில்களை நிர்வகித்து வரும் இந்து சமய அறநிலையத்துறைக்கு ஆகம கோயில்கள் எது, ஆகமம் அல்லாத கோயில்கள் எது என்ற பட்டியலே தன் கைவசம் இல்லாதது மிகவும் கண்டனத்துக்குரியது.
கணக்கெடுப்பில் முடிக்கப்பட்டுள்ள 34,971 கோயில்களில் 27,500 கோயில்களில் ஆகமம் பின்பற்றப்படவில்லை என்ற இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளதுஅதிர்ச்சியளிக்கிறது.
இவ்வாறு ஆகமமற்ற கோயில்கள் என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ள பட்டியலில் அடங்கும் பெரும்பாலான கோயில்களின் கோப்பு ஆவணங்களை பார்க்கும்போது அவற்றில் ஒரே மாதிரியான கையெழுத்து வடிவில் அனைத்து கடிதங்களும் தயாரிக்கப்பட்டு, அந்தந்த கோயில்களின் அர்ச்சகர்கள் என்ற பெயரில் பெயர் முகவரி கண்டறியாத வகையில் இடம்பெற்றுள்ளது.
மேலும் மிகப்பெரிய கோயில்களுக்கு கூட அர்ச்சகர் என்ற இடத்தில் அநேகமாக பூசாரி என்ற பதவி பெயரில் சம்பந்தப்பட்ட கோயில் ஆகமம் அற்றது என்று ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலானது எந்த தகுதியின் அடிப்படையில் எந்த தகுதியான நபர்களிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டு தயாரிக்கப்பட்டவை என்பது குறித்த வெளிப்படையான அறிக்கை ஒன்றை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட வேண்டும்.