

சென்னை: மாமல்லபுரம், கன்னியாகுமரி போன்ற சுற்றுலாப் பகுதிகளுக்குசிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணையத்தை அமைப்பதற்கான சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழ்நாடு சிறப்புப் பகுதி மேம்பாட்டு ஆணையம் குறித்த சட்ட முன்வடிவை சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தாக்கல் செய்தார்.
அதன் நோக்க காரணஉரையில் கூறியிருப்பதாவது: மாமல்லபுரம், கன்னியாகுமரி போன்ற முக்கிய சுற்றுலா மையங்களில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.300 கோடி முதலீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கம், தொழில் மயமாக்கல், சுற்றுலாத் துறையின் நிலையான வளர்ச்சி ஆகியவை நமது நவீன நகரங்களை திட்டமிடுவதில் எதிர்கொள்ளப்படும் சவாலாக அமைந்துள்ளது.
பொது வசதிகள் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் சீர்கேடு, சூழலியல் சமநிலையின் பாதிப்பு ஆகியவை தொழில்துறை மற்றும் சுற்றுலா துறைகளிலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்தகைய சவால்களை திறம்பட கையாள தனித்துவமான மேம்பாட்டு ஆணையங்களை நிறுவ வேண்டிய அவசியம் உள்ளது.
அதன்படி, உள்ளாட்சி அதிகார அமைப்புகள் அல்லது பாரம்பரிய ஆணையத்தின் அதிகார வரம்புகளை மீறாமல், திட்டமிட்ட கட்டமைப்பை உருவாக்க ஒரு சிறப்புச் சட்டம் இயற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கேற்ப எந்தவொரு பகுதியையும் சிறப்பு மேம்பாட்டு பகுதியாக அறிவிக்கவும், அந்தப் பகுதிக்கு ஒரு சிறப்பு மேம்பாட்டு ஆணையத்தை அமைக்கவும் அரசுக்கு முழு அதிகாரம் வழங்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக மாமல்லபுரம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளை மேம்படுத்த அமைக்கப்படும் சிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணையம், சிறப்பு முதன்மை திட்டத்தை தயாரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட முன்வடிவு இன்று (ஜன.24) ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.