

புதுச்சேரி: ‘புதுவை பாரதியார் கிராம வங்கி’ பெயர் இனி ‘புதுச்சேரி கிராம வங்கி’ என்ற பெயரில் இயங்கும். பாரதியார் பெயர் நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. நாடு முழுவதும் கிராம வங்கிகளின் பெயர்கள் மத்திய அரசு ஆணையின்படி மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி, இது மாற்றப்பட்டுள்ளது என்று வங்கி தரப்பில் தெரிவிக்கின்றனர்.
‘புதுவை பாரதியார் கிராம வங்கி’ புதுச்சேரியில் பல இடங்களில் செயல்படுகிறது. தற்போது அதன் பெயர் ‘புதுச்சேரி கிராம வங்கி’ என மாற்றப்பட்டுள்ளது. அதன் சின்னமும் மாற்றி அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் கிராம வங்கியில் ‘பாரதியார்’ பெயர் நீக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வங்கி தரப்பில் இதுபற்றி விசாரித்தபோது, “இந்தியாவில் உள்ள அனைத்து கிராம வங்கிகளின் பெயரையும் வங்கியின் சின்னத்தையும் நிலைப்படுத்தும் விதமாக மத்திய அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி அந்தந்த மாநிலத்தின் பெயரைத் தொடர்ந்து ‘கிராம வங்கி’ என்ற பெயரில் அழைக்கப்படும். இந்த அரசாணையின்படியே, ‘புதுவை பாரதியார் கிராம வங்கி’ ‘புதுச்சேரி கிராம வங்கி’யாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் ஊரக வங்கிகளை எளிதில் அடையாளம் காண, ‘இந்திய அரசின் வங்கி’ இது என்ற நம்பகத்தன்மையை ஏற்படுத்த இது உதவும். வங்கி பெயர் மாற்றம் எந்த வகையிலும் வாடிக்கையாளர்களையோ, வங்கி சேவையையோயோ பாதிக்காது.
உதாரணமாக, தமிழகத்தில் பல்லவன், பாண்டியன் கிராம வங்கிகள் என இருந்தன. இவை இணைக்கப்பட்டு தமிழ்நாடு கிராம வங்கியாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோல் அந்தந்த மாநில பெயர்களுடன் இனி கிராம வங்கி செயல்படும். கிராம வங்கிகள் தற்போது இணைக்கப்பட்டு 28 கிராம வங்கிகளாக நாடு முழுவதும் மத்திய அரசு உத்தரவுப்படி மாற்றப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கின்றனர்.