

கோவில்பட்டி: எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த இல்லம் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. பாரதியார் இல்லத்தை விரைவில் திறக்க வேண்டுமென பாரதி அன்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் பாரதியார் பிறந்த இல்லம் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி மாலை 6 மணிக்கு பார்வையாளர் நேரம் முடிவடைந்தவுடன், திடீரென பாரதியார் இல்லத்தின் வரவேற்பாளர் பகுதி மேல்மாடி கூரை இடிந்து விழுந்தது.
இதனால் கீழ் தளத்தின் கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் விழுந்தன. இதையடுத்து பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பாரதியார் இல்லம் ரூ.1 கோடி செலவி்ல் பழமை மாறாமல் புராதன முறையில் புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சேதமடைந்த மறுநாள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து மேற்கூரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் முழுமையாக இடித்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, பழமை மாறாமல் மேல்தளம் அமைக்கப்பட்டு, கடுக்காய் பொடி, சுண்ணாம்பு, சுண்ணாம்பு பால் உள்ளிட்ட கலவை கொண்டு மேல் பூச்சு பூசப்பட்டது.
இப்பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டன. ஆனால், இதுவரை இல்லம் திறக்கப்படாததால், கோடை விடுமுறையின்போது, இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து விசாரித்தபோது, பாரதியார் இல்லத்தில் இருந்த சுமார் 50 பழமையான புகைப்படங்களை, அவற்றின் தன்மை மாறாமல் புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை வந்ததும், அவற்றை இல்லத்தில் பொருத்திய பின்னர் அரசு சார்பில் முறையான அறிவிப்பு வரும் என தெரிவித்தனர்.
ஆனால், செப்டம்பர் 11-ம் தேதி பாரதியார் நினைவு நாள் வரும் நிலையில் அன்றைய தினம் பாரதி அன்பர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், தமிழகம் முழுவதிலும் இருந்து எழுத்தாளர்கள், கவிஞர்கள் பாரதியார் இல்லத்துக்கு வருகை தருவர்.
எனவே, செப்.11-ம் தேதிக்கு முன்னர் பாரதியார் இல்லத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாரதி அன்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாரதி முற்போக்கு வாலிபர் சங்க செயலாளர் வ.பாலமுருகன் கூறியதாவது: மகாத்மா காந்தியை ஒரு பொதுக்கூட்டத்துக்குத் தலைமை வகிக்க பாரதியார் அழைத்திருந்தார். கூட்டத்தை மறுநாள் நடத்துமாறு காந்தி கூறியபோது, “வேண்டாம், உங்கள் இயக்கத்துக்கு என் ஆசிகள்” என்று கூறிவிட்டு பாரதியார் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.
எதுவும் உடனடியாக நடைபெற வேண்டும் என்பது தான் பாரதியாரின் எண்ணமாக இருந்தது. ஆனால், அவர் பிறந்த இல்லம் இடிந்ததை தொடர்ந்து அதை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்து, திறப்பு விழாவுக்காக காத்திருப்பது வேதனையாக உள்ளது.
செப்டம்பர் 11-ம் தேதிக்கு முன்னர் பாரதியார் இல்லத்தை திறக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரதி அன்பர்கள், எழுத்தாளர்களை திரட்டி அறவழியில் போராட்டம் நடத்துவோம் என்றார்.