‘பாரதிராஜாவின் நிறைவேறாத ஆசை...’ - சொந்த ஊரில் உறவினர்கள் உருக்கம்

‘பாரதிராஜாவின் நிறைவேறாத ஆசை...’ - சொந்த ஊரில் உறவினர்கள் உருக்கம்
Updated on
2 min read

தேனி: “தன்னுடைய சொந்தங்கள் அனைவரையும் அழைத்து விருந்து வைத்து சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த பாரதிராஜா ஆசைப்பட்டார். ஆனால் அந்த ஆசை நிறைவேறாமலே மறைந்துவிட்டார்” என்று அவரது உறவினர்கள் தேனியில் சோகத்துடன் தெரிவித்தனர்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா (85) தேனி அல்லிநகரத்தில் உள்ள கீரைக்கல் தெருவைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் பெரியமாயத்தேவர், கருத்தம்மா ஆவர். இளம் வயதிலேயே கலைத்து றையில் ஆர்வமுடன் இருந்தார். இருப்பினும் குடும்பச் சூழ்நிலை காரணமாக சில காலம் அரசு சுகாதார ஆய்வாளராகவும், பங்க் ஊழியராகவும் பணிபுரிந்தார்.

<div class="paragraphs"><p>தேனி என்ஆர்டி.நகரில் உள்ள பாரதிராஜாவின் பங்களா</p></div>

தேனி என்ஆர்டி.நகரில் உள்ள பாரதிராஜாவின் பங்களா

பின்பு நாடகங்களில் நடித்து தனது கலைப்பயணத்தை தொடங்கினார். இவருடன் உடன்பிறந்தவர்கள் 4 ஆண்கள், 3 பெண்கள் ஆவர். அல்லிநகரம் தெருக்களில் சுற்றித் திரிந்த பாரதிராஜா பின்பு கலை தாகம் காரணமாக சென்னைக்குக் கிளம்பினார். அங்கு சில ஆண்டுகள் சிரமத்துக்குப் பிறகு, உதவி இயக்குநராக மாறினார்.

இது குறித்து இவரது உடன்பிறந்த தங்கை பாரதி கூறுகையில், “அண்ணனுக்கு என் மீது அலாதி பிரியம். அதனால் சின்னச்சாமி என்ற தன்னுடைய இயற்பெயரை மாற்றி என்பெயரை முதல் வார்த்தையாகவும், அண்ணன் ஜெயராஜ் பெயரை அதன் பின்பாகவும் இணைத்து பாரதிராஜா என்று வைத்துக் கொண்டார்.

சிறுவயதிலேயே கதை சொல்வது, நாடகம் நடத்துவது உள்ளிட்டவற்றில் ஆர்வமாக இருப்பார். பின்பு சென்னை சென்று சினிமா துறையில் பல்வேறு சாதனைகள் படைத்தார்” என்றார்.

<div class="paragraphs"><p>அல்லிநகரத்தில்  புதுப்பிக்கப்பட்டுள்ள பாரதிராஜா இளம்வயதில் வாழ்ந்த வீடு|தங்கை பாரதி</p></div>

அல்லிநகரத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள பாரதிராஜா இளம்வயதில் வாழ்ந்த வீடு|தங்கை பாரதி

பாரதிராஜாவின் உறவினர்கள் சுப்புராஜ், ரவி ஆகியோர் கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிறந்த ஊருக்கும், வாழ்ந்த வீட்டுக்கும் அடிக்கடி வருவார். பின்பு வருகை குறைந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பத்தில் நடந்த உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது உறவினர்கள் பலரையும் சந்தித்ததில் அவர் அதீத சந்தோஷமாக காணப்பட்டார். இதுபோன்று ஒட்டுமொத்த சொந்தக்காரர்களையும் அழைத்து விருந்துடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.

ஆனால், அவரது மகன் மனோஜ் இறப்புக்கு பிறகு மனதளவில் அவர் மிகவும் பாதிக்கப்பட்டார். அதனால் அந்த ஆசை நிறைவேறாமலே போய்விட்டது. தான் இறந்தால் தேவதானப்பட்டி காட்ரோடு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவரது விருப்பப்படி உடல் தேனி மாவட்டத்துக்கு கொண்டு வந்து அடக்கம் செய்யப்பட உள்ளது” என்றனர்.

பாரதிராஜாவின் மனைவி பெயர் சந்திரலீலா. இவருக்கு மனோஜ், ஜனனி என்று இரண்டு பிள்ளைகள். மனோஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், ஜனனி தற்போது மலேசியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

கிராமப் பகுதியான அல்லிநகரத்தில் பிறந்து கலைத்துறையில் உச்சம் தொட்ட பாரதிராஜாவின் மறைவு, இப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில், தேனி பங்களாமேட்டில் மாலையில் தேனி மாவட்ட ரசிகர்கள் மன்றம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘பாரதிராஜாவின் நிறைவேறாத ஆசை...’ - சொந்த ஊரில் உறவினர்கள் உருக்கம்
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா... தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in