

மதுரை: ‘பகவத் கீதையை ஒரு குறிப்பிட்ட மதத்துக்குள் அடைத்து வைக்க முடியாது. அது பாரத நாகரிகத்தின் ஒரு பகுதியாகும். அது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தூய தத்துவங்களை பிரதிபலிக்கிறது’ என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறினார்.
கோவை ஆர்ஷ வித்யா பரம்பரை அறக்கட்டளை அறங்காவலர் சுவாமி சர்வானந்த சரஸ்வதி விமல், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘ஆர்ஷ வித்யா பரம்பரை அறக்கட்டளையை வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்கு முறை) சட்டத்தின் (எப்சிஆர்ஏ) கீழ் பதிவு செய்து சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் அறக்கட்டளையை வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் பதிவு செய்ய சான்றிதழ் கேட்டு அளித்த விண்ணப்பத்தின் மீது 3 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை. மனுதாரர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மனுதாரர் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இதற்கு மத்திய அரசு தரப்பில், மனுதாரர் வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தின் விதிகளை மீறியுள்ளார். இதனால், பதிவுக்கு உரிமை கோர முடியாது. பல்வேறு அரசுசாரா நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுகின்றன. இதில் தேசிய பாதுகாப்பும் சார்ந்துள்ளது. மனுதாரரின் விண்ணப்பத்தை கடும் ஆய்வுக்கு உட்படுத்துவதில் தவறு இல்லை. மனுதாரர் அறக்கட்டளை ஒரு மத அமைப்பு. இதனால், மனுதாரர் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
எப்சிஆர்ஏ சட்டத்தில் மத்திய அரசின் பதிவுச் சான்றிதழ் இல்லாவிட்டால், வெளிநாட்டு பங்களிப்பை பெறமுடியாது எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மனுதாரர் அறக்கட்டளை பகவத் கீதையை கற்பிப்பதால், அந்த அறக்கட்டளை ஒரு மத அமைப்பு என முடிவுக்கு வரப்பட்டுள்ளது. பகவத் கீதை ஒரு மத புத்தகம் அல்ல. அது ஒரு தார்மிக அறிவியல். பகவத்கீதையை தேசிய தர்ம சாஸ்திரமாக அங்கீகரிக்கலாம் என அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ளது.
மகாத்மா காந்தி, மகரிஷி அரவிந்தர், லோகமான்ய திலகர் போன்ற நமது சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் பலர் பிரிட்டிஷ் அடிமை ஆட்சிக்கு எதிராகப் போராட நாட்டைத் தூண்டுவதற்காக பகவத் கீதையை பயன்படுத்தியுள்னர். பகவத் கீதையை ஒரு குறிப்பிட்ட மதத்துக்குள் அடைத்து வைக்க முடியாது. அது பாரத நாகரிகத்தின் ஒரு பகுதியாகும். முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தூய தத்துவங்களை பிரதிபலிக்கிறது. பகவத் கீதைக்குப் பொருந்தக்கூடியது வேதாந்தத்துக்கும் பொருந்தும்.
யோகாவை பொருத்தவரை, அதை மதத்தை தொடர்புபடுத்தி பார்ப்பது கொடூரமானது. யோகா உலகளாவிய ஒன்றாகும். கலிபோர்னியா நீதிமன்றம், யோகா என்பது உடல் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்தல், மன அழுத்தத்தைக் குறைத்தல் போன்ற காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் மதச்சார்பற்ற அனுபவம் எனக் கூறியுள்ளது.
மனுதாரர் அறக்கட்டளை வருமான வரிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மத்திய உள்துறை அமைச்சகம் மனுதாரர் அறக்கட்டளை மனுவை நிராகரித்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. உள்துறைச் செயலர் அறக்கட்டளை மனுவை 3 மாதத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.