

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பவாரியா கொள்ளையர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ-வுமான சுதர்சனத்தின் வீட்டுக்குள் கடந்த 2005-ம் ஆண்டு புகுந்த பவாரியா கொள்ளையர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து, வீட்டில் இருந்த 62 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த வழக்கில் பவாரியா கொள்ளையர்களான ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் அசோக் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக பெரியபாளையம் போலீஸார் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.