

உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்
புதுடெல்லி: குற்றப்பின்னணி கொண்டவர்கள் தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாஜக வழக்கறிஞரான ஏற்காடு ஏ.மோகன்தாஸ் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு: கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலின்போது குற்றப்பின்னணி கொண்டவர்கள் போட்டியிடக்கூடாது என தடை விதித்துஅப்போதைய நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட் டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து பார் கவுன்சில் உறுப்பினர் சந்திரமோகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடையுத்தரவு பெற்றார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு பதவியில் உள்ள பலர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்.
கடந்த 2023 அகில இந்திய பார் கவுன்சில், 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கக்கூடிய குற்றவழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது. அதன்பிறகு கடந்த 2025-ல் இரண்டுக்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர்கள் மட்டும் போட்டியிட முடியாத வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இதனை செல்லாது என அறிவிக்க வேண்டும். அத்துடன் 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கக்கூடிய குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.
பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டைப்போல பழங்குடியின மற்றும் பட்டியலின வழக்கறிஞர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.