

வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் அனுப்பிய தகவல்.
புதுக்கோட்டை: தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், நகைக் கடன் வித்தியாசத்தை வசூலிக்க வங்கிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. இதனால், வங்கிகளில் நகைகள் அடமானத்துக்கு கணிசமான தொகை கடனாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்து வருகிறது. இதனால், ஒரு கிராமுக்கு வங்கிகள் வழங்கிய கடன் தொகையைவிட தற்போது தங்கத்தின் மதிப்பு குறைந்துவிட்டது.
எனவே, கொடுத்த கடன் தொகையைவிட மதிப்பு குறைவாக உள்ள நகைகளை அடமானம் வைத்துள்ள வாடிக்கையாளர்களை வங்கிகள் தொடர்பு கொண்டு வித்தியாச தொகையைச் செலுத்துமாறும் அல்லது கூடுதல் நகைகளை அடமானம் வைக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றன. உரிய காலத்தில் இதை வாடிக்கையாளர்கள் செய்யா
விட்டால், வங்கி விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் சூழலும் உள்ளதால் நகைக் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். நகைக் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களை குறுஞ்செய்திகள் மற்றும் செல்போனிலும் வங்கிகள் தினமும் தொடர்பு கொள்கின்றன.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் கூறியது: நகைகளை அடகு வைத்தால் ஓராண்டுக்குள் அதற்குரிய வட்டியைச் செலுத்தி, நகைக் கடனைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் நகை மதிப்பு கூடிக்கொண்டே வந்ததால், பலரும் வட்டியைக்கூட செலுத்தாமல் அதையும் அசலுடன் சேர்த்து வந்தனர். சிலர், ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த நகையின் அன்றைய மதிப்புப்படி கூடுதலாக கடன் பெற்றனர்.
இந்நிலையில், கொடுத்த கடனைவிட தங்கத்தின் விலை குறைந்துள்ளதாகக் கூறி, ஓரிரு மாதங்களுக்கு முன்பு அடகு வைத்தவர்களைக்கூட வங்கிக்கு வரவழைத்து, வித்தியாச தொகையைச் செலுத்துமாறு வங்கி நிர்வாகங்கள் நிர்பந்தித்து வருகின்றன. கால அவசாகம் தர மறுக்கின்றன.
இல்லையேல், நகையை ஏல நடவடிக்கைக்கு உட்படுத்துவோம் எனவும் எச்சரித்து வருகின்றன. மழையின்றி சாகுபடி முற்றாக அழிந்துள்ள நிலையில், புதிய பயிர்க் கடனும் தாராளமாக விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில் வங்கி நிர்வாகங்கள் இவ்வாறு நிர்பந்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க மீட்டர் வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையேல் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இதுகுறித்து முன்னோடி வங்கி அலுவலக அலுவலர்கள் கூறியது: தங்கத்தின் விலை குறைவுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களிடம் இருந்து வித்தியாச தொகையையோ அல்லது கூடுதல் தங்கத்தையோ பெறுமாறு ரிசர்வ் வங்கியிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை.
எனினும், வங்கி நிர்வாகங்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கடனை முழுமையாக செலுத்துமாறும் நிர்பந்திக்கவில்லை என்றனர்.