

வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று நடைபெற்றது. | படம்: ம.பிரபு |
சென்னை: வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கி பணியை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கி பணியை அமல்படுத்த வேண்டும், செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
அப்போது, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வங்கிகளுக்கு வாரத்துக்கு 5 நாட்கள் வேலைமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இப்போது, மாதத்தில் இரண்டு சனிக்கிழமை விடுமுறை, இரண்டு சனிக்கிழமை வேலை என இருக்கிறது. அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும். கடந்த 2024-ம் ஆண்டு மார்ச்சில் கையெழுத்தான இருதரப்பு ஒப்பந்தத்தில், வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்க இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக்கொண்டன.
இதற்குப் பதிலாக, திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி வேலை நேரத்தை 40 நிமிடங்கள் வாடிக்கையாளர்கள் சேவை அதிகரிக்க ஊழியர்களும் ஒப்புக் கொண்டனர். இந்த ஒப்பந்தம் மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிலுவையில் உள்ளது.
இதைக் கண்டித்து, வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 8 லட்சத்துக்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மீண்டும் வேலைநிறுத்தம்...
வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை தொடர்ந்து மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, எங்களின் கோரிக்கை களை நிறைவேற்றவில்லை என்றால், மீண்டும் செப். 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.