மயிலாடுதுறையில் கனமழை காரணமாக வாழை, சம்பா பயிர்கள் பாதிப்பு

ஆறுபாதி பகுதியில் முறிந்து விழுந்துள்ள வாழை மரங்கள்.

ஆறுபாதி பகுதியில் முறிந்து விழுந்துள்ள வாழை மரங்கள்.

Updated on
1 min read

மயிலாடுதுறை: டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் பல்வேறு இடங்களில் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளதுடன், நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் பரவலாக பல்வேறு இடங்களில் வாழை சாகுபடி செய்துள்ளனர். இதில், தரங்கம்பாடி வட்டம் ஆறுபாதி கிராமத்தில் 3 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்களில், நவ.29-ம் தேதி வீசிய பலத்த காற்றில் 450 மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

மேலும், அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, கீழையூர், வானாதிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பல ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து சேத மடைந்துள்ளதாக வேதனை தெரிவித்த விவசாயிகள், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில், இந்த மழையால் ஆறுபாதி ஊராட்சியில் 500 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியது: வடகிழக்கு பருவமழை தொடங்கி அக்டோபர் மாதம் பெய்த மழையில் நாற்றுகள் அழுகி வீணாகிவிட்டன. மீண்டும் 2-வது முறையாக நடவு செய்த நிலையில், தற்போது டிட்வா புயல் காரணமாக பெய்த மழையில் இப்பகுதியில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வேர்கள் அழுகி வருகின்றன.

மழைநீர் வடியாமல் வயல்களில் தேங்கியிருப்பதற்கு இப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர் வாரப்படாததே காரணம். ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வீதம் செலவு செய்துள்ள நிலையில், தற்போது நெற்பயிர்கள் அழுகி வீணாகியுள்ளன.

எனவே, வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர் வாரவும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

<div class="paragraphs"><p>ஆறுபாதி பகுதியில் முறிந்து விழுந்துள்ள வாழை மரங்கள்.</p></div>
நாகையில் மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in