

மதுரை: ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள தனியார் விடுதிகளில் கேம்ப் ஃபயர், இசை நிகழ்ச்சி நடத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானலை சேர்ந்த பாலகிருஷ்ணன், செல்வ கணபதி உள்ளிட்ட 5 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: ”ஆனைமலை புலிகள் காப்பக இடையக பகுதி விரிவுப்படுத்தப்பட்டு கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் வனப் பிரிவுகளின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டன. இந்த எல்லை பூண்டி கிராமத்தில் தொடங்கி மன்னவனூர், கூக்கால் ஆகிய கிராமங்கள் வழியாக ஆண்டிப்பட்டி வரை செல்கிறது.
தேசிய வனவிலங்கு வாரியத்தில் முன் அனுமதி இல்லாமல் இந்த பகுதியில் விடுதிகள், ஹோட்டல்கள், பூங்காக்கள் போன்றவை கட்டப்படக்கூடாது. ஆனால் கொடைக்கானலில் முறையான அனுமதி இல்லாமல் அங்கீகாரம் அற்ற வணிக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
எனவே மன்னவனூர் கிராம ஆனைமலை புலிகள் காப்பகத்தின் இடையகப் பகுதியில் எவ்வித வணிக கட்டிடங்களுக்கும் அனுமதி வழங்க தடை விதிப்பதோடு, மன்னவனூர் கிராமத்தில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வணிக கட்டிடங்களை அகற்றவும், அதன் இயல்பான நிலைக்கு மீட்டெடுக்கவும் உத்தரவிட வேண்டும்,” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில், வணிக ரீதியான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால் ஒவ்வொரு நாளும் ‘கேம்ப் பயர்’ அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த கட்டுமானங்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
அவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தமிழக வனத்துறை முதன்மைச் செயலர், ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வன பாதுகாவலர் பதில் மனு தாக்கல் செய்யவும், தனியார் விடுதிகளில் எவ்விதமான கேம்ப் ஃபயர் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டு, வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி ஒத்திவைத்தனர்.