மதுரை: பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய 58.77 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கு, இந்து சமய அறநிலையத் துறை நிர்வாக நிதியிலிருந்து ரூ.58.54 கோடி செலவிட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த பழநி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 58.77 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதற்கான செலவுத் தொகையான ரூ.58.54 கோடியை அறநிலையத் துறையின் நிர்வாக நிதியிலிருந்து எடுக்க அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அறநிலையத் துறை நிர்வாக நிதி என்பது தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களிலிருந்து ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதிகளின் தொகுப்பாகும்.
இந்த நிதியை அறநிலையத் துறை ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர், செயல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் அறநிலையத் துறை அலுவலகங்களின் செலவுக்குத்தான் எடுக்க முடியும். இந்த நிதியை நிலம் வாங்குவது உட்பட வேறு எதற்காகவும் பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்துவது இந்து மக்கள் மீது விதிக்கப்படும் வரியாக கருதப்படும்.
எனவே, பழநி பகுதியில் 58.77 ஏக்கர் நிலம் கையகப்படுத்த, அறநிலையத் துறையின் நிர்வாக நிதியிலிருந்து ரூ.58.54 கோடி எடுக்க அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அந்த அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் அனிதாசுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், “பழநி கோயிலைச் சுற்றி உள்ள நிலங்களை கையகப்படுத்துவதற்காக, அறநிலையத்துறையின் நிர்வாக நிதியைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த மனு, ஏற்கெனவே இதுபோன்ற வழக்கு நிலுவையில் உள்ள அமர்வு விசாரணைக்கு மாற்றப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.