

ஜெம் வீரமணி, சாந்தி
சென்னை: ஜெம் வீரமணி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி, மகேந்திர சிம்ஹன், கணேஷ் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், வீரமணி உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யபட்டு நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சாந்தி, அவரின் கணவர் மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகிய மூன்று பேரும் ஜாமீன் கேட்டு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதரார்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய்குமரன், “இவர்கள் முறையாக கைது செய்யவில்லை. கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. ஏற்கெனவே காவல் துறை காவலில் எடுத்து விசாரணை முடித்துள்ளனர். எனவே, இதற்கு மேல் சிறையில் அடைக்க வேண்டிய தேவை இல்லை. ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.
காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவிதா, “கைது செய்து 40 நாட்கள் வரை எத்தனை முறை வேண்டும் என்றாலும் காவல் துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியும். விசாரணை ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது. தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்கக் கூடாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.
தனியார் தொண்டு நிறுவனம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யபட்டு, மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கபட்டது.
இதனையடுத்து வழக்கில் தீர்ப்பை தள்ளிவைத்த நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். “விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இவர்களுக்கு தற்போது ஜாமீன் வழங்கினால், அது விசாரணை பாதிக்கும் என்ற காவல் துறை தரப்பு வாதங்களை ஏற்கிறேன். எனவே, மூன்று பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என நீதிபதி உத்தரவிட்டார்.