

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக, தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் முகமது புஹாரி ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக மிரட்டி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அகில் என்பவரிடம் ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக பரங்கிமலை காவல் ஆய்வாளர் முகமது புஹாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோரை யானைக்கவுனி போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில், ஏற்கெனவே ஜாமீன் கோரி முகமது புஹாரி இரண்டு முறை தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில், மீண்டும் முகமது புஹாரி பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, முகமது புஹாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.